திண்டுக்கல் அருகே முதியவர் கத்தியால் குத்திக்கொலை - இளைஞர் வெறிச்செயல்!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே வாய் தகராறில் முதியவரை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்த உலகம்பட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் (65). விவசாயி. இவர் நேற்று தனது விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகில் வசிக்கும் உறவினரான செபாஸ்தியனின் மகன் வின்சென்ட்(28) என்பவர், தனது வளர்ப்பு நாயுடன் வந்துள்ளார். இதனை கண்டு ராயப்பனின் பேரன் அச்சமடைந்ததால், அவர் நாயை வெளியே அழைத்துச்செல்லும்படி வின்சென்டிடம் கூறியுள்ளார்.

Murder

இது தொடர்பாக ராயப்பனுக்கும், வின்சென்டுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, அங்கு வந்த வின்சென்டின் தம்பி டேனியல்(25), ராயப்பனை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ராயப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு போலீசார், கொலையான ராயப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான டேனியலை தேடி வருகின்றனர்.