குமரி அருகே மினி பேருந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி!

 
dead

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மினி பேருந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லலிதா (60). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முருகன் இறந்துவிட்டார். மேலும் பிள்ளைகளுக்கும் திருமணமாகியதால், லலிதா வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை திங்கள் நகருக்கு சென்று காய்கறிகள் வாங்கிய லலிதா, பின்னர் மினி பேருந்தில் ஏறி தலக்குளத்திற்கு சென்றுள்ளார்.

kumari gh

தலக்குளம் பேருந்து நிறுத்தத்தில் முன்புறமாக பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது, திடீரென ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால், லலிதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பேருந்தின் பின்புற சக்கரம் அவரது கால் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் உள்ளவர்கள் மீட்டு குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், லலிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார், லலிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மினிபேருந்து ஒட்டுநர் சுனில் மரியதாசை தீவிரமாக தேடி வருகின்றனர்.