அரசுப்பேருந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி... பல்லடத்தில் சோகம்!

 
palladam

திருப்பூர் மாவட்டம்  பல்லடத்தில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டியின் மீது, பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்தவர் அழகம்மாள் (70). இவர் சேலத்தில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று பேரக் குழந்தைகளுடன் ஈரோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அந்த பேருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டது. அப்போது, இயற்கை உபாதை கழிப்பதற்காக செல்வதாக கூறிவிட்டு, அழகம்மாள் நகர்ந்து கொண்டிருந்த பேருந்தின் முன்புற படிகட்டு வழியே இறங்க முயன்றார்.

palladam

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், அவரது கால்களின் மீது அரசுப்பேருந்தின் பின்புற சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த அழகம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அழகம்மாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் பல்லடம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.