மொடக்குறிச்சி அருகே பாம்பு கடித்து வடமாநில இளைஞர் பலி!

 
dead body

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கொடிய விஷம் பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேற்கு வங்க மாநிலம் அட்லபூர் பகுதியை சேர்ந்தவர் கிரண் சிங்(48). இவரது மகன் பீர் சிங். தந்தை, மகன் இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஈரோட்டு வந்து, மொடக்குறிச்சி அடுத்த கேட்புதூர் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். மேலும், நிறுவன வளாகத்தில் உள்ள தரக செட்டில் தங்கி வந்தனர். இந்த நிலையில், சம்பவத்தன்று கிரண் சிங், அவரது மகன் பீர் சிங் ஆகியோர் பணி முடிந்து, தங்களது அறையில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது, பீர் சிங்கை கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது.

snake bite

வலி தாங்க முடியாமல் பீர்சிங் அலறி துடித்துள்ளார். இதனால்  அதிர்ச்சியடைந்த கிரண் சிங்,  உடனடியாக அந்த பாம்பை அடித்துக் கொன்றார். பின்னர்,  பீர்சிங்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  பீர்சிங் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.