சேலத்தில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை - இருவர் கைது!

 
dead body

சேலத்தில் வடமாநில தொழிலாளியை அடித்துக் கொன்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இங்கு பணிபுரியும் பீகாரை சேர்ந்த குருசரண் சகானி உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் மாலை சமையல் பொருட்கள் வாங்குவதற்காக தாதகாப்பட்டி அம்மாள் ஏரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூணங்கரடை சேர்ந்த சீனிவாசன், ராஜா ஆகியோர், ஹார்ன் அடித்து சாலையில் வழிவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வடமாநில தொழிலாளர்களுக்கு, சீனிவாசன், ராஜா ஆகியோருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது, அங்குள்ள தொட்டியின் மீது விழுந்த குருசரண் சகானி படுகாயமடைந்தார்.

arrest

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார்,  குருசரண் சகானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் சீனிவாசன், ராஜா ஆகியோரை கைது செய்தனர். வடமாநில தொழிலாளி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.