கோவையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை - நண்பர் கைது!

 
murder

கோவை செட்டிப்பாளையத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளியை அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் லாலம் கேவத்(37). இவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள மோல்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த சார்லஸ் என்பவரும் பணிபுரிந்து வந்தார். அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வரும் இருவரும் அடிக்கடி ஓன்றாக மது அருந்துவது வழக்கம். கடந்த சில நாட்களாக லாலம் கேவத் மாயமாகினார். இதனால் குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர்.

arrest

இந்த நிலையில், செட்டிப்பாளையம் பெரியகுயிலி இடும்பன் கோவில் அருகே கை கால்காள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அது மாயமான லாலம் கேவத் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் அவரது நண்பரான சார்லஸை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, லாலம் கேவத்தை அவர் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், போலீசாரின் விசாரணையில், கடந்த 8ஆம் தேதி இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சார்லஸ், லாலம் கேவத்தை அடித்துக்கொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து, செட்டிப்பாளையம் போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.