குமரி அருகே வடமாநில தொழிலாளி கல்லால் தாக்கி கொலை; சக ஊழியர் வெறிச்செயல்!

 
murder

கன்னியாகுமரி அருகே தனியார் மில்லில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளியை, சக தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள கீழ்மணக்குடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தும்பு மில் செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலம் கிழக்கு செம்பரம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி நானாக் ஷா(32) என்பவர் தங்கி பணிபுரிந்து வந்தார். அவருடன் மற்றொரு வடமாநில தொழிலாளியான ரமேஷ் என்பவரும் தங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று காலை அவர்கள் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேமடைந்த மில் ஊழியர்கள், அவர்களது அறையின் கதவை தட்டியுள்ளனர்.

kumari

ஆனால் உள்ளே இருந்து பதில் வரவில்லை. இதனால் அறைக்கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தனர். அப்போது, நானாக் ஷா தலையில் சிமெண்ட் கல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். மேலும், உடனிருந்த ரமேஷ் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து உடனடியாக தென்தாமரைக்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலையான நானாக் ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தென் தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர். வடமாநில தொழிலாளி கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.