வடகிழக்கு பருவமழை - காஞ்சிபுரத்தில் மழைநீர் வடிகால்களை ஆய்வுசெய்த ஆட்சியர்!

 
kan

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் பகுதிகளை ஆட்சியர் ஆர்த்தி நேற்று நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தண்ணீர் தேங்காமல் இருக்க வடிநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெரு, உலகளந்த பெருமாள் கோவில் தெரு, ஆவாகுட்டை தெரு ஆகிய இடங்களில் மழைநீர் வடிநீர் கால்வால்களையும் பிள்ளையார்பாளையம், லிங்கப்பன் பாளையம் தெருவில் மழைநீர் தேங்கியுள்ளதை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

kanchi

பின்னர் அவர் கூறியதாவது :- காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால், எல்லா மண்டலத்திலும், துணை ஆட்சியர் மூலமாக மண்டலக்குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வந்து, கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். தண்ணீர் தேங்கி உள்ள இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பாக நிவாரண தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

மேலும், தொடர்ந்து 3 நாட்கள் மழை அறிவிப்பின் காரணமாக, மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மாவட்ட பேரிடர் தொடர்பான அவசரகால கட்டுப்பாட்டு குழு கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடமிருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 4 துறையை சார்ந்த அலுவலர்கள் 24 மணிநேரமும் கண்காணிக்க மாவட்ட பேரிடர் தொடர்பான அவசர கால கட்டுப்பாட்டு குழு செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர்(பயிற்சி) அர்பித் ஜெயின், மாநகராட்சி ஆணையர் கண்ணன், கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.