நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

 
nellaiappar

நெல்லையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

நெல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பா் - காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப்பெருந் திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து, நாள்தோறும் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிலையில், ஆனிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, அதிகாலையில் சுவாமி, அம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். 

nellaiappar

தொடர்ந்து, காலை 9 மணியளவில் சபாநாயகர் அப்பாவு, ஆட்சியர்  விஷ்ணு, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து, தேரோட்ட நிகழ்வினை தொடங்கி வைத்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில், நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாயா... ஒம் நமச்சிவாயா... என்ற கோஷம் அதிர தேரை வடம்பிடித்து இழுத்து, சுவாமியை வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து, அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். ஆனித் தேரோட்டத்தை ஒட்டி நெல்லை மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.