நம்பியூர் - சென்னிமலை பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலி!

 
dead

ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் சென்னிமலை பகுதிகளில் வெவ்வேறு நிகழ்வுகளில் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கெட்டிசெவியூர், கல்லியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (61). இவரது மகன் கதிரவன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு கதிரவன் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். படம் முடிந்து அதிகாலை 2 மணி அளவில் வீட்டுக்கு வந்து அவர், மதுபோதையில் இருந்த  மோட்டார் சைக்கிள் நிறுத்த முயற்சித்தார். அப்போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது முகம், நெற்றி பகுதியில் அடிபட்டு ரத்தும் வந்துள்ளது. இதனை அடுத்து, ராஜேஸ்வரி அவருக்கு முதலுதவி செய்து, வீட்டில் தூங்க வைத்துள்ளார். 

தொடர்ந்து, காலை கண்விழித்த கதிரவனுக்கு வாந்தி ஏற்பட்டு உள்ளது. மேலும், நெஞ்சு வலிப்பதாகவும், இடது தோள்பட்டை வலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ராஜேஸ்வரி அவருக்கும் தைலம் தேய்த்துவிட்ட நிலையில் மீண்டும் படுத்து தூங்கியுள்ளார். இதனிடையே மாலை ஆகியும் அவர் எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த  ராஜேஸ்வரி அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கதிரவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

erode gh

இதேபோல், தூத்துக்குடி ஆசிர்வாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (56). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் வாடகை வீட்டில் தங்கி, ஈரோடு அக்ரஹாரத்தில் உள்ள சாயப்பட்டறையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று பொன்ராஜ் தனது வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால், வீட்டு உரிமையாளர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே பொன்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.