நாகர்கோவிலில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை - தாய், கள்ளக்காதலன் கைது!

 
pocso

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(33). இவர் மாந்திரீக தொழில் செய்து வருகிறார். இவரை, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மாந்திரீகம் தொடர்பாக அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் வெளி நாட்டில் பணிபுரியும் நிலையில், அவர் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இருவருக்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் சிவகுமார் அடிக்கடி பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

rape

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி, சிவகுமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதனை வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அதனை பொருட்படுத்த வில்லை என தெரிகிறது. பின்னர் இதுகுறித்து மாணவி வெளிநாட்டில் உள்ள தனது தந்தையிடம் செல்போனில் தெரிவித்துள்ளார்.

அப்போது, அவர் அறிவுறுத்தியதன் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சிவக்குமார் மற்றும் சிறுமியின் தாயை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து, சிவகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கேவில் சிறையிலும், மாணவியின் தாய் தக்கலை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.