மதுரையில் துணிகரம்... பெண் காவலரிடம் 3 பவுன் செயினை பறித்துச்சென்ற மர்மநபர்கள்!

 
chain Snatch

மதுரையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஆயுதப்படை காவலரிடம் 3 பவுன் தங்க செயினை பறித்துச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

மதுரை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிபவர் வெள்ளியம்மாள் (31). இவர் கணவர் ராஜிவ்காந்தி மற்றும் குழந்தையுடன், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பீ.பி.குளம் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு, தனது குழந்தையுடன் காய்கறிகள் வாங்க சென்றிருந்தார். பின்னர் காவலர் குடியிருப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இரவு 8.15 மணி அளவில் அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள் திடீரென வெள்ளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்துச்செல்ல முயன்றனர். அப்போது, வெள்ளியம்மாள் செயினை பிடித்துக் கொண்டதால், செயின் அறுந்து 3 பவுன் நகை கொள்ளையர்களின் கையில் சிக்கியது.

madurai

இதனை அடுத்து, கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். வெள்ளியம்மாள் துரத்திச் சென்றபோதும் கொள்ளையர்கள் வேகமாக தப்பிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வெள்ளியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், வெள்ளியம்மாளிடம் நகையை பறித்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பியோடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.