வாணியம்பாடி அருகே பயிற்சி மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
dead body
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சென்னை மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள மல்லகுண்டா தாசிரியப்பனுரை சேர்ந்தவர்கள் முனிராஜ் - ஞானம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் மாரிமுத்து (22). இவர் இளநிலை மருத்துவ படிப்பு முடித்துவிட்டு, சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சதிஷ், பெற்றோருடன் தங்கியிருந்தார்.

கடந்த சனிக்கிழமை இரவு தனது அறைக்கு தூங்க சென்ற சதிஷ், நேற்று காலை நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தாய் ஞானம்மாள், சதிஷை எழுப்பியபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சதிஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

vaniyambadi

தகவலின் பேரில் திம்மாம்பேட்டை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சதிஷ், மயக்க ஊசி செலுத்திக் கொண்டது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.