சூலூர் அருகே தனியார் மில்லில் வடமாநில தொழிலாளி கொலை : மேற்பார்வையாளர் வெறிச்செயல்!

 
murder

கோவை அருகே தனியார் மில்லில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளியை, கத்தியால் குத்திக்கொன்ற மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுபாஷ் கும்பார் (30). இவரது தம்பி சுரேந்தர் கும்பார் (28). சகோதரர்கள் இருவரும் கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில், கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர். மில் வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று இரவு தொலைக்காட்சியில் அதிகம் சத்தம் வைத்து பார்த்தது தொடர்பாக சுபாஷ் கும்பாருக்கும், அவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

sulur

இதனால் இரவு பணிக்கு செல்லாமல் இருந்துள்ளனர். இதனை அறிந்து மிலில் மேற்பார்வையாளராக பணிபுரியும், அதே பகுதியை சேர்ந்த மார்ட்டின்(37) என்பவர் அவர்களை அழைத்து வர தொழிலாளர் குடியிருப்புக்கு சென்றுள்ளார். அப்போது, மார்ட்டினுக்கும், சகோதரர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுபாஷ்குமார், சுரேந்தர் குமார் ஆகியோர், மேற்பார்வையாளர் மார்ட்டினை தாக்கியுள்ளனர். அப்போது, மார்ட்டின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரது வயிற்று பகுதியில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த இருவரையும், அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுபாஷ் கும்பார் பரிதாபமாக உயிரிழந்தார். சுரேந்தர் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, மேற்பார்வையாளர் மார்ட்டினை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.