கொடுமுடி அருகே சாலையோர தடுப்பு மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து... பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் பலி!

 
accident

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சாலையோர தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அம்மன் நகர் ஈ.பி. ஆபிஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (22 ). கூலி தொழிலாளி. இதேபோல், சிவகிரி திரு.வி.க. நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(19). இவர் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்களான இருவரும் நேற்று இரவு வேலை தொடர்பாக கொடுமுடிக்கு சென்றிருந்தனர். பின்னர், இருவரும் மோட்டார் சைக்கிளில் சிவகிரிக்கு திரும்பி கொண்டிருந்தனர். தாமரைபாளையம் அடுத்த கோட்டைக்கட்டு வலசு பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரின் மீது அவர்களது மோட்டார் சைக்கிள் மோதியது.

kodumudi

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அருண்குமார் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். விபத்தை கண்டு அந்த பகுதி மக்கள், கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அருண்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, விபத்தில் பலியான மணிகண்டன் மற்றும் அருண் குமார் ஆகிய 2 பேரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, விபத்தில் பலியான அருண்குமாருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.