மகன் தற்கொலைக்கு முயன்றதால் விஷம் குடித்த தாய் பலி... கோவில்பட்டி அருகே சோகம்!

 
poison

கோவில்பட்டி அருகே தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை முயன்ற சம்பவத்தில், தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களது மகன் மாரீஸ்வரன். இவர் நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். சமீப நாட்களாக அவர்  கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை மாடசாமி அவரை கண்டித்து கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் மனவேதனையடைந்த மாரிஸ்வரன், கடந்த சில நாட்களுக்கு முன் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் ஈஸ்வரியும், விஷத்தை குடித்தார்.

nellai gh

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஈஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாரீஸ்வரனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.