மாயமான இளைஞரை கண்டுபிடித்து தரக்கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் தாய் மனு!

 
chennimalai

சென்னிமலை அருகே மாயமான விசைத்தறி தொழிலாளியை கண்டித்துபிடித்து தரக்கோரி அவரது தாய் மற்றும் கிராம மக்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம்  சென்னிமலை முகாசி பிடாரியூர் குட்டையன் தோட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது இளைய மகன் சேகர் ( 21). இவர் அதே பகுதியில் உள்ள விசைத்தறியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மாலை வெள்ளோடு புங்கம்பாடியில் உள்ள தனது நண்பர் பாபுவை பார்க்க சென்ற நிலையில், பின்னர் சேகர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாபு வீட்டிற்கு சென்று விசாரித்தபோது பாபுவிற்கும், அவரது தந்தைக்கும் ஏற்பட்ட பிரச்சனையை விலக்கிவிட்டு சேகர் சமாதனம் செய்ததும், பின்னர் சேகரின் இருசக்கர வாகனத்தை அடகு வைத்து இருவரும் மது அருந்தியது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, கடந்த 2 மாதங்களாக சேகர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சேகரின் தாய் மற்றும் சகோதரர் சதிஷ் ஆகியோர், அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கடந்த மாதம் 12ஆம் தேதி  சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை அவரை பற்றி தகவலும் கிடைக்கவில்லை.

erode

இந்த நிலையில், அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் தலைமையில், சேகரின் தாய் மற்றும் உறவினர்கள் இன்று ஈரோடு மாவட்ட எஸ்பி-ஐ நேரில் சந்தித்து சேகரை கண்டுபிடித்து தரக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில், தனது மகன் சேகர் கடந்த 2 மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை என்றும், இதனால் அவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், நண்பர்களால்  அடித்து படுகொலை செய்யப்பட வாய்ப்புள்ளதால், இது குறித்து சிறப்பு தனிப்படை அமைத்து காணாமல் போன தனது மகனை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மனு அளித்தபோது, ஜெகஜீவன்ராம் ஜனநாயக மக்கள் இயக்கம் ஆறுமுகம் , தலித் விடுதலை இயக்கம் பொன்.சுந்தரம் , திராவிடத் தமிழர் கட்சி முருகேசன் மற்றும் முகாசி பிடாரியூர் கிராம மக்கள் உடனிருந்தனர்.