மகள்களின் கண் முன்னே தாய் தற்கொலை... குடும்ப தகராறில் சோகம்!

 
dead

திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் பாய்ச்சல் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (30). கட்டிட தொழிலாளி. இவருக்கு நதியா(28) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். பெருமாள், தனது அண்ணன் அன்பழகன், அவரது மனைவி அம்பிகா ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகளை பார்த்துக் கொள்வது தொடர்பாக நதியாவுக்கும், அம்பிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் அம்பிகா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

tirupattur gh

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்த அம்பிகா, நதியா உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனவேதனையடைந்த நதியா, குழந்தைகளை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்று உட்புறமாக பூட்டிக்கொண்டுள்ளார். பின்னர், அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அவரது மகள்கள் கதறி துடிக்கவே அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தனர். அப்போது, தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டவர்கள், அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் வழியிலேயே நதியா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து நதியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்,  ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.