கிருஷ்ணகிரி அருகே ஏரியில் மூழ்கி தாய், மகள் பலி!

 
drowned

கிருஷ்ணகிரி அருகே ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி தாய், மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் உண்ணாமலை பாளையம் கிராமததை சேர்ந்தவர் வசந்த் (22). கட்டிட தொழிலாளி. இவருக்கு ராஜேஸ்வரி (22) என்ற மனைவியும், சிவன்யா (4) என்ற மகளும் உள்ளனர். வசந்த், குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் கே. பூசாரிப்பட்டி பகுதியில் வசித்து வந்தார். நேற்று வசந்த் வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், ராஜேஸ்வரி, மகள் சிவன்யாவை அழைத்துக்கொண்டு வீட்டின் அருகேயுள்ள பெரிய ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். தொடர்ந்து, ராஜேஸ்வரி ஏரியின் கரையில் அமர்ந்து துணி துவைத்துள்ளார். அப்போது, கரையில் நின்று கொண்டிருந்த குழந்தை சிவன்யா எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்தார்.

krishnagiri

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி குழந்தையை காப்பாற்ற ஏரிக்குள் குதித்துள்ளார். அப்போது, நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மகாராஜாகடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஏரியில் இருந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.