ஹாக்கி வீரர் கார்த்திக் செல்வம் பெற்றோரிடம் நேரில் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் சிவசங்கர்!

 
hocky

அரியலூரை சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்திக் செல்வத்தின் பெற்றோரிடம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அரியலூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கார்த்திக் செல்வம், கடந்த மே மாதம் இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வாகினார். ஆசிய கோப்பையில் பங்கேற்று, வெண்கலப்பதக்கம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். மேலும், 2023 ஜனவரியில் ஒடிசாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ள கார்த்தி செல்வம், தற்போது பெங்களுருவில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவரது தந்தை செல்வம், அரியலூர் அரசுக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். அவரது தாய் வளர்மதி வீட்டு வேலை செய்து வருகிறார். இருவருக்கும் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் கார்த்திக் செல்வத்தை போட்டியில் பங்கேற்க தயார் படுத்தி வந்தனர். இவர்களது ஏழ்மை நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகின.

stalin

இதனை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று அரியலுரில் உள்ள ஹாக்கி வீரர் கார்த்திக் செல்வத்தின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது பெற்றோரை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, கார்த்திக் செல்வத்திற்கு தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் வரும் 24ஆம் தேதி தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளதாகவும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது, கார்த்திக் செல்வத்தின் பெற்றோர், போக்குவரத்து துறை அமைச்சர் மூலம் தங்கள் கோரிக்கையை நேரடியாக கேட்டறிந்ததற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.