ஈரோட்டில் 124 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஆணையை வழங்கிய அமைச்சர் முத்துசாமி!

 
muthusamy

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புக்கான ஆணைகளை, 124 பயனாளிகளுக்கு அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

ஈரோட்டில் பெரியார் நகர், பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக குடிசை கட்டப்பட்ட 1,072 குடியிருப்புகள் பழுதாகியதால் அவை இடித்து அகற்றப்பட்டு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் சார்பில் அதே பகுதியில் புதிதாக 1,072 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஏற்கனவே குடியிருந்த பயனாளிகளுக்கு மீண்டும் ஒப்படைப்பதற்கு பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக ரூ.1.25 லட்சம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு, பின்னர் அந்த தொகை ரூ.1 லட்சமாக குறைக்கப்பட்டது. இந்த தொகையை பயனாளிகள் 20 ஆண்டுகள் தவணை முறையில் செலுத்தி குடியிருப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. 

muthusamy

அதன் படி, தற்போது வரை 29 பயனாளிகள் முழு கட்டணத்தையும், 274 பயனாளிகள் தவணை முறையிலும் செலுத்தி உள்ளனர். இந்த குடியிருப்புகள், ஏற்கனவே இருந்த பழைய குடியிருப்புகளின் கதவு எண் படியே, மீண்டும் புதிய குடியிருப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக கருங்கல்பாளையம், அழகரசன் நகர் பகுதிகளில் 272 குடியிருப்புகளுக்கான பங்களிப்பு தொகையை செலுத்திய 124 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் முத்துசாமி கலந்து  கொண்டு 124 பயனாளிகளுக்கு, குடியிருப்புகளுக்கான ஆணையை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி, காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.