திருச்சி முக்கொம்பு மேலணையில் தண்ணீர் திறப்பை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு!

 
mukkombu

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படுவதை, அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியதால் காவிரியில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் 2 லட்சம் கனஅடிக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரி பாயும் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

trichy

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு இன்று அதிகாலை நிலவரப்படி 1.40 லட்சம் கனஅடி  நீர் வந்து கொண்டிருந்தது. இதில் 85 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும், 55 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றிலும் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி பகுதியில் விலை நிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால் 200 ஏக்கர் பரப்பிலான வாழை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அணையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முழு கண்காணிப்புடன் பணியாற்றிடவும் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது,நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், எம்எல்ஏக்கள் பழனியாண்டி, தியாகராஜன், அப்துல்சமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.