மேட்டுப்பாளையம் பகுதியில் மீண்டும் உலா வரும் காட்டுயானை பாகுபலி... பொதுமக்கள் அச்சம்!

 
bahubali

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் மீண்டும் காட்டுயானை பாகுபலி நடமாட தொடங்கி  உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெல்லிமலை, கல்லாறு, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானை பாகுபலி, விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. தனது இயல்புக்கு மாறாக யானைக் கூட்டங்களோடு சேராமலும், வேறு பகுதிக்கு செல்லாமலும் தொடர்ச்சியாக கிராமங்களில் சுற்றி வந்தது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, கடந்த 5 மாதங்களுக்கு முன் பாகுபலி யானையை பிடித்து கும்கி யானையாக மாற்ற வனத்துறையினர் முயற்சித்தனர். எனினும் இந்த முயற்சி தோல்வியடைந்தது. 

bahubali

இதற்கு பின் கிராமப்பகுதிகளில் காட்டுயானை பாகுபலியின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், ஒராண்டுக்கு பிறகு நேற்றிரவு வனப்பகுதியை ஒட்டிய கிராமப்பகுதிகளில் மீண்டும் காட்டுயானை பாகுபலி நடமாட தொடங்கி உள்ளது. நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் - குன்னுர் சாலையை கடந்து சமயபுரம் பகுதிக்கு சென்ற பாகுபலி யானை, அங்கு குடியிருப்புகள் நிறைந்த சாலைகளில் உலாவியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

தொடர்ந்து, இன்று அதிகாலை மீண்டும் சமயபுரம் குடியிருப்பு சாலையில் நடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு யானை கடந்து செல்வதற்காக காத்திருந்தனர். பாகுபலி யானை கிராம பகுதிகளில் அடிக்கடி உலா வருவதால், அதனை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.