பெரம்பலூர் அருகே மெடிக்கல் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... மாமுல் தர மறுத்ததால் வெறிச்செயல்!

 
murder

பெரம்பலூர் அருகே மாமுல் தர மறுத்ததால் மெடிக்கல் கடை உரிமையாளர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் மகன் நாகராஜன்(44). இவர் பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் பகுதியில் மனைவி மணிமேகலை, மகன் கனிஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். மேலும், அதே பகுதியில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வந்தார். நாகராஜன், இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்டவர் என தெரிகிறது. இதனை அறிந்து கொண்ட லாடபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் பிரபாகரன் என்பவர் நாகராஜை மிரட்டி அடிக்கடி மாமுல் வசூலித்து வந்துள்ளார்.

perambalur

இந்த நிலையில், நேற்று மாலை பிரபாகரன் வழக்கம் போல் நாகராஜனிடம் சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அப்போது, அவர் தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறியதுடன், பிரபாகரனின் தந்தை பெரியசாமியிடம் புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தனது நண்பரான ரகுநாத் என்பவருடன் நாகராஜனை, ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் அழைத்துச்சென்று சரமாரியாக தாக்கி உள்ளனர். அப்போது, கிராமத்தினர் திரண்டதால் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். 

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த நாகராஜனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் வீட்டிற்கு திரும்பிய அவருக்கு நேற்றிரவு திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நாகராஜன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

dead body

தகவலின் பேரில், பெரம்பலூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பிரபாகரன் மற்றும் பிரதீப்பை தேடி வருகின்றனர். மாமுல் தர மறுத்ததால்  மெடிக்கல் உரிமையாளர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.