திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்!

 
tvr

திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் துவங்கி வைத்தார்.

திருவாரூர் ஆர்.சி.பாத்திமா உயர்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான  மருத்துவ மதிப்பீடு முகாம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்துகொண்டு முகாமை துவங்கி வைத்து, பார்வையிட்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்,  மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வேண்டுவோர், உதவி உபகரணங்களான 3 சக்கர  வண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடைபயிற்று வண்டி, கை, கால் செயற்கை அவயங்களுக்கான  காலிப்பர்கள், கல்வி உதவித்தொகை மற்றும் இலவச  அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்க இன்று மதிப்பீட்டு முகாம் தொடங்கி வைக்கப்படுகிறது.

thiruvarur collector

அதன்படி, நாளை கொரடாச்சேரி, நாளை மறுதினம் வலங்கைமான், வரும் 28ஆம் தேதி மன்னார்குடி, வரும் 29ஆம் தேதி திருத்துறைப்பூண்டி, வரும் 30ஆம் தேதி நன்னிலம், மே 2ஆம் தேதி நீடாமங்கலம், மே 4ஆம் தேதி குடவாசல், மே 5-ல் கோட்டுர் மற்றும் மே 6ஆம் தேதி முத்துப்பேட்டை ஒன்றியங்களிலும் முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாற்றுத்திறன் அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் தேவைப்படும் ஆவணங்கள் ஆதார் அட்டை நகல், பார்போர்ட் அளவு புகைப்படம் 4, வருமானச்சான்றிதழ், குடும்ப அட்டை நகல், தலைமையாசிரியர் சான்று (படிக்கும் மாணவர்களுக்கு), மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை புத்தக நகல் ஆகியவைகளுடன் மேற்குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் மருத்துவ மதிப்பீட்டு முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும், 2021-22ஆம் கல்வியாண்டில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான  உள்ளடக்கிய திட்டதின் கீழ் 3 ஆயிரத்து 753 குழந்தைகள் பள்ளி மற்றும் சிறப்பு  பயிற்சி மையங்களின் மூலம்  பயன்பெற்று வருகின்றனர். இன்று நடைபெறும் மருத்துவ மதிப்பீட்டு முகாமில் தொடக்க நிலையில் 105 மாணவர்களும்,  உயர் தொடக்க நிலையில் 204 மாணவர்களும் என மொத்தம் 309 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயனடைகின்றனர்.இந்த மருத்துவ மதிப்பீட்டு முகாமின் வாயிலாக இதுவரை பயனடையாத  குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படுகிறது, என ஆட்சியர் தெரிவித்தார்.