திண்டுக்கல் நகரில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது; 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

 
dgl

திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து 16 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் நகர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக ஏராளமான புகார்கள் வரப்பெற்றன. இது குறித்து திண்டுக்கல் டவுன் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், திண்டுக்கல் டவுன் உட்கோட்ட டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், டவுன் வடக்கு காவல் ஆய்வாளர் உலகநாதன் தலைமையில், நகர் உட்கோட்ட குற்ற தடுப்புப்பிரிவு போலீசார், நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

arrest

அப்போது, வாகனத் திருட்டில் ஒரே நபர் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், போலீசாரின் விசாரணையில் அந்த நபர்  ஆத்தூர் அருகே உள்ள குறும்பப்பட்டியை சேர்ந்த ஜெயராம் என்கிற நல்லமணி(52) என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஜெயராமை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து  கைது16 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.