கோவையில் விற்பனைக்காக குட்காவை பதுக்கிய நபர் கைது ; 161 கிலோ குட்கா பறிமுதல்!

 
gutka

கோவை துடியலூர் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கிவைத்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 161 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக ஏராளமான குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார், துடியலூர் ராஜன் காலனி டிவிஎஸ் நகர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

gutka

அப்போது, சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விஷ்ணுகுமார் (48) என்பவர் விற்பனைக்காக ஏராளமான குட்கா, பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, சுமார் 161 கிலோ அளவிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விஷ்ணுகுமார் மீது துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.