தருமபுரி அருகே விவசாய தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது!

 
thoppur

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை கைது செய்த போலீசார், 25 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 2 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா புகையிலை மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் பொருட்டு போலிசார் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலிசார், ஊத்துப்பள்ளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

arrest

அப்போது, வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் இரவு நேரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர்  ஜெயராமன்(47) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 25 லிட்டர் சாராய ஊறல், மற்றும் 2 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.