கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி ஆண் காட்டுயானை உயிரிழப்பு!

 
wild elephant

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி ஆண் காட்டுயானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதர்க்காடு அருகே பஞ்சுரா தனியார் எஸ்டேட் உள்ளது. நேற்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை ஒன்று, தோட்டத்திற்குள் புகுந்து அங்குள்ள பாக்கு மரங்களை முறித்து சாப்பிட்டு உள்ளது. அப்போது, பாக்குமரம் அந்த வழியாக சென்ற மின்சார கம்பி மீது விழுந்த நிலையில், மின்கம்பி அறுந்து காட்டு யானையின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் யானை உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது. 

nilgiris

இன்று காலை காட்டு யானை இறந்து கிடப்பதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் மூலம் யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டடு, அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.