"கோவையில் ஒரு வாரத்தில் சாலைகளை சீரமைக்காவிட்டால் மாபெரும் உண்ணாவிரதம்" - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி!

 
velumani

கோவையில் ஒரு வார காலத்திற்குள் சாலைகள் சீரமைக்கப்படாவிட்டால் மிகப்பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் குனியமுத்துர் அருகே உள்ள 87 மற்றும் 88-வது வார்டுகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி வேலுமணி கூறியதாவது -  இது தாழ்வான பகுதி என்பதால் செங்குளத்தில் நீர் நிறையும்போது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்து விட்டனர். அதிகளவில் ரெட்மிக்ஸ் கொண்டு வந்து சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும். இது குறித்து ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு தகவல் அளித்தும் அவர்கள் இங்கு வரவில்லை. தண்ணீரில் தவித்து வந்த மூதாட்டியை நாங்கள் மீட்டு வேறு இடத்தில் தங்க வைத்துள்ளோம். 

cbe

குறிச்சிக்குளம் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறவில்லை. டெண்டர் விடப்பட்ட 500 சாலை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரிகள் அதிகளவில் விதிக்கப்பட்டு உள்ளதால் பணம் இல்லை என்று கூறாமல் அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் நான் செய்த பணிகளுக்கு பின்பு இதுவரை எந்த வேலையும் செய்யவில்லை. கோவை மாவட்ட மக்களை இந்த அரசு புறக்கணிக்கிறது. ஆய்விற்கு பின்னர் பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் மனுவாக அளிக்க உள்ளேன். ஒரு வாரத்தில் சாலைகள் சீரமைக்கப்படவில்லை எனில் மிகப் பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

கோவையில் நடைபெற்று வந்த பால பணிகள் மற்றும் 500 சாலை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது மாநகராட்சிக்கு வருமானம் அதிகம் வருவதால் சாலை பணிகளை உடனடியாக துவங்க வேண்டும். சென்னையில் சாலைகள் நன்றாக இருப்பதாக சொல்கின்றனர். மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. நன்றாக கூட மழை பெய்யவில்லை. இந்த அரசு வேலை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறினார்.