தருமபுரியில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 9 குழந்தைகளுக்கு ரூ.2.70 லட்சம் பராமரிப்பு உதவித்தொகை வழங்கல்!

 
dd

தருமபுரி மாவட்டத்தில் கொரோனாவால் தாய் - தந்தையை இழந்த 9 குழந்தைகளுக்கு ரூ.2.70 லட்சம் மதிப்பிலான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைகள் குறித்தும் வேண்டியும் 360 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சாந்தி, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். 

dd

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 9 குழந்தைகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் ஜீன் 2021 முதல் மார்ச் 2022 வரை 10 மாதங்களுக்கு ஒரு குழந்தைக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் 9 குழந்தைகளுக்கும் மொத்தம் ரூ.2.70 லட்சம்  மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். 

அப்போது, அந்த குழந்தைகளிடம் நன்கு படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்ந்த இடத்தை அடைந்திட சிறப்பான கல்வியை கற்க வேண்டும் என அறிவுரை வழங்கினார் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் சாந்தி, உதவி ஆணையர் (கலால்) தணிகாச்சலம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.