காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... ஈரோடு அருகே சோகம்!

 
suicide

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வாழவல்லான் பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் - உலகம்மாள் தம்பதியினர். இவர்களது 3-வது மகள் சங்கீதா(27). இவர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளைம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார். அப்போது, அவருக்கு, க.கோட்டுபுள்ளாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து, இருவரும்  கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர்.

dead body

இந்த நிலையில், சங்கீதாவின் நடத்தையில் வேல்முருகன் சந்தேகமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு பெற்றோர் வீட்டில் சீர்வரிசை கொடுக்க வில்லை என கூறி வேல்முருகன், அவரது தாயார் ஈஸ்வரி ஆகியோர் துன்புறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சங்கீதாவின் மகள் புனித நீராட்டு விழாவின்போது, மகளை சங்கீதாவின் பெற்றோர் வீட்டிற்கு மகளை அனுப்ப மறுத்துள்ளனர். இதனால், சங்கீதாவும், அவரது மகன் மட்டும் தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து,  வேல்முருகன் மனைவியை தாக்கி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று காலை சங்கீதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது தாய் உலகம்மாளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உலகம்மாள், மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி நம்பியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.