களியக்காவிளை அருகே லாரி - இருசக்கர வாகனம் மோதல்; 2 இளைஞர் பலி!

 
accident

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள ஒற்றாமரம் பகுதியை சேர்ந்தவர் செய்யது அலி (24). படந்தாலுமுடு பகுதியை சேர்ந்தவர் சிபின்(24). நண்பர்களான இருவரும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக, நேற்று மலையோர கிராமமான நெட்டா பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் மாலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் களியக்காவிளைக்கு திரும்பி கொண்டிருந்தனர். வைகுண்டம் என்ற இடத்தின் அருகே வந்தபோது இருசக்கர வாகனம் மீது எதிரே கேரளாவுக்கு ரப்பர் மரங்களை ஏற்றிச்சென்ற லாரி நேருக்கு நேர் மோதியது. 

accident

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செய்யது அலி, சிபின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த களியல் போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.