ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு ஆக. 3-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 
dharmapuri

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு வரும் 3ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டு உள்ளார். 

தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா வரும் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதனையொட்டி, ஒகேனக்கலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சியும் நடைபெற உள்ளன. இந்த நிலையில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வரும் 3ஆம் தேதி புதன்கிழமை தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

hogenakkal falls

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வருகிற 3-ஆம் தேதி (புதன்கிழமை) தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் 27ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம், 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.