புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி அண்ணன், தங்கை உள்பட 3 பேர் பலி!

 
lightning striking

புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் அண்ணன், தங்கை உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அருகே உள்ள பறையத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் திருப்புனவாசல் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவருக்கு சஞ்சய் (17) என்ற மகனும், சஞ்சனா(15) என்ற மகளும் உள்ளனர். இருவரும் திருப்புனவாசல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 11 மற்றும் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் அண்ணன், தங்கை இருவரும் பள்ளிக்கு சென்றிருந்தனர். மாலையில் பள்ளி முடிந்து, அவர்களது சித்தப்பா இளையராஜா(39) இருவரையும் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பறையத்தூருக்கு சென்று கொண்டிருந்தார்.

dead body

அப்போது, திருப்புனவாசல் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்த நிலையில், மழையில் நினைந்தபடி 3 பேரும் சென்றுள்ளனர். இந்த நிலையில், பறையத்தூர் அருகே உள்ள சிங்காரக்கோட்டை கோவில் அருகே சென்றபோது இளையராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சஞ்சய் மற்றும் சஞ்சனா  ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய், சஞ்சனா பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை அடுத்து, திருப்புனவாசல்  போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.