பெயிண்டர் கொலை வழக்கில் நண்பருக்கு ஆயுள் தண்டனை... திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு!

 
judgement

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பெயிண்டர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அவரது நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் வழிவிட்டான் அய்யனார்(47). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம அடுத்த சின்னூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். அவருடன், அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்த மங்களேஸ்வரன் (44) என்பவரும் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இரவு மங்களேஸ்வரன், வழிவிட்டான் அய்யனார் ஆகியோர் பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுஅருந்தி உள்ளனர்.

tiruppur

அப்போது மங்களேஸ்வரன், வழிவிட்டான் அய்யனாரின் மனைவியை குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இருவரும் தங்களது அறைக்கு தூங்க சென்ற நிலையில், நள்ளிரவில் வழிவிட்டான் அய்யனார், மங்களேஸ்வரனை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குபதிவு செய்து, கடந்த ஆண்டு ஆக.3ஆம் தேதி வழிவிட்டான் அய்யனாரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்த நிலையில் நேற்று வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றவாளி வழிவிட்டான் அய்யனாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினர். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.