ஊட்டியில் குடியிருப்பு பகுதியில் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிறுத்தை... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
leopard

ஊட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று கவ்விசெல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தமிழக விருந்தினர் மாளிகையின் பின்புறம் வெஸ்டோட குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சிறுத்தை ஒன்று, விருந்தினர் மாளிகை சுற்றுவட்டார பகுதிகளில் உலாவி வருகிறது. மேலும், அந்த சிறுத்தை வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருகிறது. 

leopard

இந்த நிலையில், வெஸ்டோட குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு அடிக்குமாடி வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, அங்கு 2-வது மாடியில் உள்ள அறையின் வெளியே படுத்திருந்த வளர்ப்பு நாயை கவ்விக்கொன்றது. பின்னர் படிக்கட்டு வழியாக நாயுடன் கீழே இறங்கிய அந்த சிறுத்தை, விருந்தினர் மாளிகை அருகே உள்ள புதருக்குள் சென்று மறைந்தது. வளர்ப்பு நாயை காணாததால் வீட்டின் உரிமையாளர் அங்கு பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா காட்சியை  ஆய்வு செய்தபோது, நாயை சிறுத்தை கவ்விச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. 

இதனை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக அச்சத்தில் மூழ்கி உள்ள வெஸ்டோட பகுதி பொதுமக்கள், வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.