"தனியார் விடுதிகள், இல்லங்களை பதிவு செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை" - விழுப்புரம் ஆட்சியர் எச்சரிக்கை!

 
villupuram collector

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோரகள் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர். இது தவிர குழந்தைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சிலர் பதிவு செய்யாமலும் பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவ்விடுதிகளை முறைப்படுத்தி கண்காணித்திட தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014 கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின்படி விடுதி நிர்வாகிகள் https://tnswp.com என்ற இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் தாங்கள் நடத்திவரும் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை 31.08.22-க்குள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

vilupuram

மேலும், இதனை கண்காணித்திட மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அவ்வாறு ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியும் பட்சத்தில் சட்டப்பிரிவு 20-ன் கீழ் விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் மீது காவல்துறையின் மூலம் வழக்கு தொடர்ந்து, அதிகபட்சமாக 3 ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் விடுதிகள் மற்றும் இல்லங்கள் நடத்திவரும் அனைத்து விடுதி நிர்வாகிகளும் மேற்கண்ட இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணியினை 31.08.22க்குள் முடித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை (தொலைபேசி எண் - 04146222288) அணுகவும் என ஆட்சியர் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.