வலங்கைமானில் கோவில் குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி... தெப்ப திருவிழாவில் நிகழ்ந்த சோகம்!

 
drowned

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் கோவில் தெப்ப திருவிழாவின்போது குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை பகுதியில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி நேற்றிரவு கோவில் தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, தெப்பத்தை இயக்கும் பணியில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்ந்த சந்திரமோகன் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு தெப்பத்திருவிழா முடிந்த நிலையில், பணியாளர்கள் தெப்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

death

அப்போது, திடீரென சந்திரமோகன் மாயமாகி உள்ளார். இது குறித்து சக தொழிலாளர்கள் அளித்த தகவலின் பேரில் வலங்கைமான் தீயணைப்புத்துறை வீரர்கள், குளத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்திர மோகன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து, வலங்கைமான் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.