ஈரோட்டில் கூலி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
dead

ஈரோட்டில் தோட்ட வேலை செய்த தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்காண்டு வருகின்றனர்.

ஈரோடு பெரியசேமூர் எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (52). கூலி தொழிலாளி. இவர் எல்லப்பாளையம் விஐபி கார்டனை சேர்ந்த ஒருவரது தோட்டத்தில் வேலை செய்துள்ளார். கடந்த 16ஆம் தேதி அன்று கூலி வழங்குவது தொடர்பாக தோட்ட உரிமையாளருக்கும் வரதராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தோட்ட உரிமையாளர் தகாத வார்த்தைகளால் பேசி, தன்னை தாக்கியதாக கூறி வரதராஜன், அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

erode gh

சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் காலை வரதராஜனின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் வரதராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், தோட்ட  உரிமையாளர் தாக்கியதால் தான்  வரதராஜன் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர்.

தகவலின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வரதராஜனை தாக்கிய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதராஜனின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே அவர் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.