கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
கோவையில் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
கோவையின் காவல் தெய்வம் என போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா, நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, நேற்று மதியம் 2 மணியளவில் கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, முன்னாள் கோவில் தக்கார் விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். ராஜவீதியில் இருந்து புறப்பட்ட தேரானது பெரியக்கடை வீதி, ஒப்பணக்கார வீதி, பிரகாசம் சாலை, பழமார்க்கெட் வழியாக மீண்டும் நிலையை அடைந்தது. தொடர்ந்து, டவுன்ஹாலில் உள்ள திருக்கோவிலுக்கு சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


