கொளத்துப்பாளையம் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா... திரளான பக்தர்கள் பங்கேற்பு!

 
kumbabishekam

பெருந்துறை அடுத்த கொளத்துப்பாளையம் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கொளத்துப்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற சன்னதி விநாயகர், கன்னிமூல கணபதி மற்றும் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரனரமைப்பு பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில், மகா மாரியம்மன் கருவறை அருகே வசந்த மண்டபம், கோபுரம், கன்னிமூல கணபதிக்கு கோயில் ஆகியவை அமைக்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கோவில் கும்பா அபிஷேக விழா கடந்த 17ஆம் தேதி இரவு கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது. கடந்த 18ஆம் தேதி காலை கணபதி ஹோமம், புனிதநீர் எடுத்து வருவதல் நிகழ்ச்சியும், அன்று மாலை  மூளைப்பாலிகை போடுதல், முனியப்பசாமி ஊர்வலமும் நடைபெற்றது. 

kumbabishekam

தொடர்ந்து, விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்யாகம், கும்ப அலங்காரம், ரக்ஷாபந்தனம், மகா மாரியம்மன் கும்ப ரூமாக பரிவார தெய்வங்களுடன் யாக சாலையில் சிறப்பு பூஜை, முதற்கால யாக பூஜை ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று காலை 9 மணிக்கு புண்யாகம், சுதை சிற்பங்கள் கண்திறப்பு கலசம் வைத்து, 2ஆம் கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று மாலை 5 மணிக்கு 3ஆம் கால யாக பூஜையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

இதனையொட்டி, இன்று அதிகாலை 5 மணிக்கு 4ஆம் கால பூஜை நிறைவு பெற்று, கலசங்கள் கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, கோபுரத்தில் வைக்கப்பட்டு விநாயகர், மகா மாரியம்மன், ஆலய விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த விழாவில், கொளத்துப்பாளையம், பெருந்துறை, வடமுகம் வெள்ளோடு, பிச்சாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.