காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டம் : 15 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகளை வழங்கிய ஆட்சியர் ஆர்த்தி!

 
kan

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று  ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இம்முகாமில் சாலை வசதி, குடிநீர் வசதி, இலவச வீட்டுமனை பட்டா, ஆதரவற்ற பெண்கள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 260 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஆர்த்தி, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

kan

தொடர்ந்து, இன்றைய கூட்டத்தில் 15 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.41,200 மதிப்பிலான காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகளை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். அப்போது, வாலாஜாபாத்  வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில்  கொடிநாள் நிதியாக ரூ.5.61 லட்சம் காசோலையை மாவட்ட ஆட்சியரிடம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேதபுரி வழங்கினார். மேலும், வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் எணை இணைக்கும் பணியில் ஈடுபட்டு 90 சதவீதக்கும் மேல் பணிமுடிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் ஆகியவற்றை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பிரகாஷ் வேல், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.