மதுரையிலிருந்து அழகர் மலை திரும்பிய கள்ளழகர் ; திரளான பக்தர்கள் வழிபாடு!

 
alagar malai alagar malai

மதுரையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் நேற்று காலை அழகர் மலை வந்தடைந்தார். இன்று உற்வச சாந்தியுடன் மதுரை சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி மாலை அழகர் மலையில் இருந்து, கள்ளர் திருக்கோலத்தில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள்,  கடந்த 15ஆம் தேதி மதுரை மூன்றுமாவடி பகுதியை வந்தடைந்தார். அங்கு நடந்த எதிர்சேவையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அழகரை வரவேற்றனர். தொடர்ந்து, அன்றிரவு தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை பெற்றுக்கொண்டார்.

alagar malai

இதனை தொடர்ந்து, ஏப்.16ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதனை தொடர்ந்து, ஏப்.17ஆம் தேதி வண்டியுர் தேனுர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த அழகர், அன்றிரவு ராமராயர் மண்டகப்படியில் தசாவதார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  

இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் தல்லாகுளத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய பின் அழகர் மலை நோக்கி புறப்பட்டார். மதுரையில் இருந்து, சர்வேயர் காலனி, கடச்சநேந்தல், அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி வழியாக  கள்ளழகர் நேற்று காலை கோயில் வந்தடைந்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் கள்ளழகரை தரிசித்து வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து, இன்று உற்சவ சாந்தி நடத்தப்படுகிறது. அத்துடன் மதுரை சித்திரை திருவிழா முடிவுக்கு வருகிறது.