கள்ளக்குறிச்சி மாணவி மரணம் ; கொடிமுடியில் இளைர்களை திரட்டி போராட முயன்ற இருவர் கைது!

 
arrest

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு வாட்ஸ்அப் மூலம் இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்த முயன்ற கொடிமுடியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது  செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சின்னாக்கண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (22). கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் அசோக் (19). இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு கடந்த ஓராண்டாக கூலி வேலை செய்து வருகிறார். நண்பர்களான இருவரும் கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2  மாணவி இறந்ததை அறிந்து, அவரது மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக இளைஞர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக, தங்களது வாட்ஸ்அப் மூலம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு தகவல் அனுப்பி, சேலம் ரயில் நிலையத்தில் திரண்டு அங்கே மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

whatsapp

இவர்களது வாட்ஸ்-அப் உரையாடல் குறித்த தகவல் கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனுக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து, அவர் கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், கொடுமுடி போலீசார் ஸ்ரீதர் மற்றும் அசோக்கை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு இளைஞர்களுக்கு தகவல் அனுப்பி, மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முயற்சி செய்தது தெரிய வந்தது.  இதையடுத்து, அவர்கள் மீது கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்ந்து, அவர்கள் கொடுமுடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.