ஈரோட்டில் காளிங்கராயன் கால்வாய் பாசன விவசாயிகள் தர்ணா போராட்டம்!

 
kalingarayan

ஈரோட்டில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காளிங்கராயன் கால்வாய் விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காளிங்கராயன் கால்வாய் விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி  காளிங்கராயன் பாசன விவசாய சங்க தலைவர் சேதுராஜ் தலைமையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அப்போது பேசிய சேதுராஜ், பாசன கால்வாய் மராமத்து பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், பணிகள் சரவர நடைபெற வில்லை என்று கூறினார். மேலும், பாசன கால்வாய் ஆயக்கட்டில் சுமார் 1,200 ஏக்கரில் செங்கல் சூளைக்காக மண் அள்ளப்படுவதாகவும், இது தொடர்ந்தால் ஆயக்கட்டு காணாமல் போகும் எனவும் தெரிவித்தார்.  மேலும், மாவட்டத்தில் உள்ள பிற கால்வாய்களில் நீர் திறப்பின்போது ஆட்சியர், உயர் அதிகாரிகள் பங்கேற்கும் நிலையில் காலிங்கராயன் கால்வாயில் நீர்திறக்கும்போது பங்கேற்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, காலிங்கராயன் பாசன விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

erode

தொடர்ந்து, இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சிறு குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திர ராசு, மொடக்குறிச்சி வட்டாரத்தில் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு உள்ள உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு, அரசு உயர்த்தி வழங்கிய இழப்பீடு பல விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தார். தயிர் மற்றும் அதன் உப பொருள்கள், உணவு தானியங்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வாபஸ் பெற வேண்டும் என கூறிய அவர், நத்தம் பகுதியில் உள்ள நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும்,  கீழ்பவானி கால்வாய் புனரமைப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்,  திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள் குறித்து அவதுறாக பேசியதற்கு தனது கண்டனங்களை தெரிவித்துக் கொண்டார். மேலும், கரும்புக்கான ஆதார விலையை அரசு டன்னுக்கு ரூ. 4 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.