திருச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் கக்கன் படம் அகற்றம்... மாவட்ட தலைவரை கண்டித்து கட்சியினர் ஆர்ப்பட்டம்!

 
trichy

திருச்சியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்த கக்கன் புகைப்படம் அகற்றப்பட்டதை கண்டித்து, நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், கடந்த 17ஆம் தேதி எஸ்.சி பிரிவு சார்பில் தியாகி கக்கன் படம் மாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்ட தலைவர் ஜவஹர், அந்த படத்தை அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் இதுகுறித்து கேட்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என்றும், கக்கன் உருவ படத்தை மீண்டும் மாட்ட மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

trichy

இதனை கண்டித்து, காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு மாவட்ட தலைவர் ஜவஹரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய நிர்வாகிகள், அருணாச்சலம் மன்றத்தில் தியாகி கக்கன் புகைப்பட திறப்பு விழாவிற்கு பின்னர், அந்த படத்தை மாவட்டத் தலைவர் ஜவஹர் கழற்றி எறிந்துவிட்டதாகவும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தனர். 

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், இன்று காலை 10 மணிக்குள் மீண்டும் கக்கன் புகைப்படத்தை மாட்டாவிட்டால்,  உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் முரளி, கள்ளத்தெரு குமார், ஜிஎம்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்