திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம் : 600 காளைகள், 400 மாடிபிடி வீரர்கள் பங்கேற்பு!

 
jallikattu

திருச்சி மாவட்டம் பெரியசூரியூர் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள பெரிய சூரியூர் கிராமம் நற்கடல் குடிகருப்பண்ண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை 2ஆம் தேதி நடைபெறும் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெறும். இதன்படி, இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு விழாவை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த 600 காளைகள் பங்கேற்றுள்ளன. மேலும், 400 மாடிபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

suriyur

கால்நடைத்துறை இணை இயக்குனர் மருத்துவர் மருதை ராஜு தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து, காளைகளை போட்டியில் பங்கேற்க அனுமதித்னர். விழாவில் முதல் காளையாக கருப்பணசாமி கோயில் காளையும், அடுத்து அம்மன் கோவில் காளையும் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து, ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை இளைஞர்கள் தீரமுடன் அடக்க முயன்றனர். சில காளைகள் இளைஞர்களை அச்சுறுத்தியடி சீறிப்பாய்ந்து சென்றன.  பிடிபடாத சிறந்த காளைகளுக்கு சிறப்பு பரிசுகளும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதல் பரிசாக பைக், 2-வது பரிசாக பிரிட்ஜ், வாஷிங் மெஷின், தங்க மோதிரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

jallikattu

காலை 7.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி, மதியம் 2 மணி வரை நடைபெறும். இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டுகளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பெரியகுளம் பகுதியில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் தலைமையில், ஏடிஎஸ்பி, திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் உள்ளிட்ட 435 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போட்டியில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.