தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு... 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

 
thammambatti jallikattu

தம்மம்பட்டி அடுத்த உலிபுரத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியின்போது காளை  முட்டியதில் மற்றொரு காளை பரிதாபமாக உயிரிழந்தது. 

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரம் கிராமத்தில் பாம்பாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலுர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 700 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

jallikattu

இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை இளைஞர்கள் தீரமுடன் அடக்க முயன்றனர். அப்போது, சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கிய நிலையில், சில காளைகள் வீரர்கள் அச்சுறுத்தியபடி சீறிப்பாய்ந்து சென்றன. இறுதியாக போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், வெள்ளி பொருட்கள், சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டின்போது காயமடைந்தவர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற தம்மம்பட்டி அடுத்த செந்தாரப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான காளை களத்தில் இருந்து ஓடி வந்தது. அப்போது, பின்னால் வந்த மற்றொரு மாடு அதனை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த விக்னேஷின் காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.