ஒரே அறையில் இரட்டை கழிப்பிட விவகாரம்... கோவை மாநகராட்சி விளக்கம்

 
cbe corp

கோவை அம்மன்குளம் பகுதியில் கழிவறையில் ஓரே அறையில் இரட்டை கழிப்பிட இருந்த புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில்,  சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட அந்த கழிப்பிடம் உபயோகமின்றி இருப்பதால், அதனை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக கோவை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவை மாநகராட்சி வார்டு எண் 66 அம்மன்குளம் பகுதியில் இக்கழிப்பிடம் 1995ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் ஆண், பெண் என இருபாலருக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.  கூடுதலாக சிறுவர்களுக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டு உள்ளது. சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில் , சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில்  இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும்  என்பதற்காகவும், கதவுகள் இருந்தால் குழந்தைகளால்  உள்புறம் தாழிட்ட பின்  திறந்து வெளியே வர இயலாது என்பதாலும் கதவுகள் பொருத்தப்படவில்லை. 

coimbatore

இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி, பராமரிப்பு செய்ய ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிப்பிடம் உபயோகம் இல்லாமல் இருப்பதால் அவர்களை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சிறுவர்களுக்கான கழிப்பிடத்தை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஷர்மிளா தெரிவித்துள்ளார்.